Home அறிவிப்புகள் ஊர் சென்று திரும்பிய உறவுகளின் உள்ளக்குமுறல்
09 | 09 | 2010
ஊர் சென்று திரும்பிய உறவுகளின் உள்ளக்குமுறல் PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 24 January 2010 23:33

              குரும்பசிட்டி கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், வலி வடக்கு இடம் பெயர்ந்வர் அமைப்பின் தலைவருமாகிய  இளைப்பாறிய அதிபர் திரு சி. நடராஜா ஆசிரியர் அவர்களின் பகிரதப்பிரயத்தனம் காரணமாக 20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளிற்கு ஊரைத் தரிசிக்கும் பாக்கியம்   24.01.2010 அன்று கைகூடியது. பல நாட்களாக காத்திருந்து கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற நோக்கில் சாவாகச்சேரியில் இருந்து தெல்லிப்பளை வரை இடம் பெயர்ந்து வாழும்  எங்கள் ஊரவர் எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்று பார்த்த எங்கள் கிராமம் இன்று இருக்கும் நிலையோ பலத்த வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்தாகவே இருந்தது என்று   குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் திரு. அ. சிவராஜா அவர்கள் தொலைபேசி உரையாடலில் விபரித்திருந்தார்.  

Kurumbasiddy Map    காலை 8 மணிக்கு அறிவிக்கப்பட்டபடி எமது ஊர்மக்கள் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் வந்து சேர்ந்ததும் அடுத்து காலை 10 மணிக்கு தெல்லிப்பளைக்கு கொண்டு செல்லப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு சீருடையினரின் பாதுகாப்புடன் மாவிட்டபுரம், காங்கேசன்துறை வரை சென்று (அவ் ஊர் மக்களும் இணைந்து சென்றதால்) மீண்டும் தெல்லிப்பளை வரை வந்து கட்டுவனூடாக புல்லும் புதர்களும் காட்டு மரங்களும் நிறைந்து மிருகங்கள் மட்டுமே வாழக்கூடிய இடமாக மாறி உள்ள நாம்பிறந்த மண்ணை   கிறவல் பாதையாக மாறி ஊடறுத்து சொல்லும் நா. பொன்னையா வீதிவளியாக வசாவிளான் மத்திய மகாய வித்தியாலயம் வரை சென்று மீண்டும் தெல்லிப்பளை வரை அழைத்து வந்து விட்டதாக அறியப்படுகின்றது. இந்தப் பிரயாணம் முடியும் வரை எவரும் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம் உறவுகளின் சந்ததியினர் பலர் இப்படி ஒரு கிராமம் இருக்கின்றது என்பதே தெரியாது வளாந்து இன்று அங்கே சென்று அவர்கள்  கண்ட காட்சிகள் மனதை நெகிழ வைப்பதோடு ஒரு வித வெறுப்பையும் ஏமாற்ற உணர்வையும் கொடுத்திருந்தது என்பதை அறிய அதிக நேரம் தேவைப்படாது.  

குரும்பசிட்டி சந்தியில் 2மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடமும், பல நோக்கு கூட்டுறவு சங்கக் கட்டிடமும் மரங்களின் மத்தியில் கட்டிடமாகத் தெரியும் நிலையில் உள்ளதாகவும், நாம் ஒடி உலாவி பலாமரத்தின் கீழ் கால் கடுக்க நின்று கல்வி கற்ற  பொன் பரமானந்தவர் மகா வித்தியாலயம் என்னும் அறிவாலயத்தின் கட்டிடங்களுக்குள் இன்று பெரிய மரங்கள் வளர்ந்து சரணாலயம் மாக மாறி இருக்கிறது என்றும் அறியப்படுகின்றது.

காளிகோயில் கட்டிடத்தையும், சித்தி விநாயகர் ஆலயத்தின் சில பகுதிகள் தெரியும் நிலையில் அம்மன் கோவில் நோக்கி செல்லும் பாதை பாவனையில் இருப்பது போன்ற தோற்றத்தைக் கண்ட எங்கள் உறவுகள் ”அரோகரா, அரோகரா”  எனக் கோசம் எழுப்பியதோடு அவ்வழியே செல்லும்படி பேரூந்தின் சாரதியை மன்றாடியதாகவும் செய்தி வந்தது. (இருப்பையும், இருப்பிடத்தையும் இழந்தாலும் இதயத்தில் வைத்திருக்கும் இறைவனை என்றும் மறவாத உறவுகள் எங்களின் குரும்பசிட்டியர்கள்.) நான்கு பேரூந்து கள் கொண்ட தொடரில் தான் மட்டும் தனி வழி செல்ல முடியாது என சாரதி தெரிவித்து மறுப்புத்தெரிவித்து விட்டாராம். புகைப்படங்கள் எடுக்கவும் தடை இருந்ததால் எந்த செய்தியும் குரல் வழி மட்டுமே வெளியுலகை வந்தடையும்.

இப்பயணத்தின் போது சென்ற மற்றவர் விபரிக்கும் போது, ஈழகேசரி பொன்னையா வீதியில் ஒரு சிலரது வீடுகளின் முன் உள்ள மதில் சுவர்களை காணக்கூடியதாக இருந்ததாகவும். சித்தி விநாயகர் கோயிலின் சில பகுதிகளை அடர்ந்த மரங்களின் இடைகளினூடு பார்வையிட்டதாகவும், மற்றயபடி எல்லா திசைகளிலும் உயர்ந்த மரங்களையே காணக்கூடியதாகவும் தெரிவித்தார்.

வசாவிளான் மகாவித்தியாலயக் கட்டிடங்கள் தெளிவாகத் தெரிவதோடு அவ் வழியில் உள்ள அண்ணன்மார் ஆலயம் இருப்தாகவும், அதனுடன் சில கட்டிடங்களும் காணப்படுகின்றது என்ற தகவலும் உண்டு. 
 
கிடைத்த இந்த தகவல் தவிர மற்றய இடங்கள் பற்றையும் புதரும் நிறைந்திருந்ததுடன் அண்மையில் பெய்த மழையின் காரணமாக மரங்கள் செளிர்த்து வளர்ந்துள்ளாதால், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண் இனங்காண முடியாத நிலையை அடைந்திருக்கின்றது.

மண்ணின் நிலை இது வென்றால் மக்களின் நிலை இதை விட மிக மோசமானதாக இருப்பதாக வெளிக்காட்டப்பட்டது.  வன்னியில் இருந்து இடம் பெயர்து முட்கம்பி வேலிகளிக்குள் அடைபட்டு விடுதலையாகி இன்று நிற்கதியாகி இருக்கும் எம்மவர் பற்றிக் கேட்டால் கல்நெஞ்சும் உருகும். ஆரசாங்க உதவியாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் இருப்பதற்கு வீடு, உடுப்பதற்கு உடை, படிப்பதற்கு பாடப்புத்தகம், இதைவிட அவயங்களை இழந்தும், முகாம்களுக்குள் வாழ்க்கை நடாத்தியாதால் ஏற்பட்ட உடல் உபாதைகளும், மன உளைச்சல்களும் எமது மக்களை வாட்டிவருகின்றது.

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கி சிதைந்து போய் இருக்கும் எங்கள் கிராமத்தை மீட்டெடுக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் கிராம அபிவிருத்திச் சங்கமும் அதன் காப்பாளர்களும் போற்றுதற்குரிய பணியைச் செய்யும் உன்னத மனிதர்கள். திடீரென பல உறவுகள் வன்னி முகாமில் இருந்து யாழ் கொண்டு வந்து விடப்பட்டதும் தங்களால் இயன்ற வரை அவர்களுக்கு உதவி புரிந்து, காப்பதற்கு யாருமற்ற கைவிடப்பட்ட அநாதைகள் அல்ல நீங்கள்… என்று மக்கள் சேவை புரிந்து வருகிறார்கள்.

வெளி நாடுகளில் உறவினர் உதவி இன்றி இருப்போர் பாவப்பட்டவர்கள் அல்ல என்னும் பொருளறிந்து வயோதிபர் நலன் காப்பு அமைப்பு என்னும் நிறுவனத்தையும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நடாத்தி வருகின்றார்கள்.

உறவினரை வாழவைப்பதுடன் கடமை முடிந்து விட்டது என இருப்பதோ, அல்லது ஒருவர் அல்லது இருவர் உதவுவதன் வழியாக இந்த தேவைகள் நிறைவேற்றப்படுதோ இயலாத காரியமாகும். எங்கள் உறவினரும் நாமும் என்றுவாழாது எங்கள் கிராமமும் நாங்களும் என்ற நிலைக்கு எல்லேரும் மாறவேண்டும்.

ஊர் கிடைத்தால் அங்கு மனிதர்கள் வாழ வேண்டும். இன்று இருப்பது போல மரங்களும் விலங்குகளும் அல்ல. வழம் பொருந்திய சமுதாயம் ஒன்று எங்கள் ஊரில் மீண்டும் உருவாக வேண்டும். இதற்கு உதவி புலத்தில் இருந்து தாய் நிலத்திற்கு செல்ல வேண்டும். இதை ஓவ்வொருவரும் எங்கள் கடமை என எண்ணி மறவாது செயலில் இறங்க வேண்டும். இதுவே தாய் மண்ணில் உள்ள எம்மவரை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாத வேராகும்.

          "ஊரை இளக்கவும் மாட்டோம், வேரை யாரும் மறக்கவும் மாட்டோம்." 

 

-: ஆக்கம் :- மகேசன்மைந்தன் :-

 
Gallery
Random Images
Village Time
YOUR IP - 38.107.191.97
Polls
இணைய செயற்பாடு பற்றி?
 
Archive

 Aug   September 2010   Oct

SMTWTFS
   1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
2627282930 
Julianna Willis Technology
Users Info